அலுமினியம் எங்கும் இருக்கிறது – உணவு, குடிநீர், காற்று மற்றும் நாம் உபயோகப்படுத்தும் பல பொருட்களிலும் இருக்கிறது. அளவிற்கு மேல் உடம்பில் அலுமினியம் இருந்தால் அது நச்சுத்தன்மை உடையது.

கீழ்க்கண்ட பொருட்களில் அதிக அளவில் அலுமினியம் உள்ளது. அவை:

உணவு – பொதுவாக எல்லா உணவுப்பொருட்களிலும் குறைந்த அளவில் அலுமினியம் இருக்கிறது. தேயிலை, வெள்ளரிக்காய், மசாலாப்பொருட்க்கள், மூலிகைகளில் அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது. இப்பொருட்களில் அலுமினியம் மற்ற பொருட்களுடன் சேர்ந்திருப்பதால் அதிக அளவில் உறிஞ்சப்படுவதில்லை. தேயிலை, காப்பி, தானியங்கள் மற்றும் மென்குடிபானங்களில் அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது. பதனிடப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது. பதனிடப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் இரசாயனப்பொருட்களான E173, E541, E554 மற்றும் E556 களில் அலுமினியம் அல்லது அலுமினிய உப்புக்கள் இருக்கின்றன. தாய்ப்பாலோடு ஒப்பிடும்பொழுது பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் குழந்தை உணவுகளில் 10 முதல் 20 பங்கு அலுமினியம் கூட இருக்கிறது. சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் குழந்தை உணவுகளில் 100 பங்கு வரை அதிகம் அலுமினியம் இருக்கிறது. சமையல் சோடா பொடியில் (baking powder) மிக அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது.

குடிநீர் – குடிநீரில் மிகக்குறைந்த அளவில் அலுமினியம் உள்ளது. ஆனால் இது இலகுவாக இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுகிறது. பல நாடுகளில் கலங்கிய குடிதண்ணீரை சுத்தப்படுத்த அலுமினியம் உப்புக்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. இந்தக் குடிநீரில் மிக அதிக அளவில் அலுமினியம் இருக்கும். குடிநீரைச் சுத்தப்படுத்த உபயோகிக்கப்படும் பல வடிகட்டிகள் (filter) அலுமினியத்தை நிறுத்துவதில்லை.

அலுமினியம் சமையல் பாத்திரங்கள் – பொதுவாக அலுமினியம் சமையல் பாத்திரங்கள் மோசமானவையில்லை. அதிக அமிலமுடைய உணவுப்பொருட்களைச் சமைக்கும்பொழுதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதில் அதிக அளவு அலுமினியம் வெளியேறி உணவில் கலக்கிறது.. ஆகையால் அலுமினியம் சமையல் பாத்திரங்களை தவிர்ப்பது நல்லது. நல்ல முறையில் சமைக்க பல சிறந்த பாத்திரங்கள் இப்பொழுது கிடைக்கின்றன.
சிப்பத்திற்கு உதவும் அலுமினியப் பொருட்கள் – சிப்பதிற்கு உதவும் அட்டைப் பெட்டிகள், தகர டப்பாக்களின் உட்புறத்தில் மெல்லிய அலுமினியத் தகடு ஒட்டப்படுகிறது. இவைகளில் மிகக் குறைந்த அளவிலேயே அலுமினியம் இருக்கிறது. ஆனால், அமிலமுள்ள உணவு அலுமினியப் பாத்திரத்திலோ அல்லது அலுமினியத் தாளில் சுற்றப்பட்டுச் சமைக்கப்பட்டாலோ அலுமினியம் உணவுக்குள் சென்று விடும்.

மருந்துகள் – அல்சர் மற்றும் அஜீரணத்திற்கு உபயோகப்படுத்தப்படும் மருந்துகளில் அதிக அளவில் அலுமினிய உப்புக்கள் இருக்கின்றன. பொதுவாக இதிலிருந்து குறைந்த அளவிலேயே அலுமினியம் உறிஞ்சப்படும். இந்த மருந்துகளைச் சாப்பிடும்பொழுது வைட்டமின் சி மாத்திரையையும் வைட்டமின் சி அதிகமுள்ள உணவையும் தவிர்க்க வேண்டும். வியர்வை நாற்றத்தைப் போக்கும் டியோடோரன்ட்களிலும் அதிகம் அலுமினியம் உப்புக்கள் உள்ளன. அலுமினிய உப்புக் கட்டிகளும் இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சில ஷாம்புகளிலும் அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது.

அலுமினியம் அதிகமுள்ள தேநீர், வெள்ளரிக்காய் முதலியவைகளைச் சாப்பிடும்பொழுது வைட்டமின் சி அதிகமுள்ள உணவுப் பொருட்க்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. முக்கியச் சாப்பாட்டோடும் அலுமினியம் அதிகமுள்ள பொருட்களை தவிர்க்கவேண்டும். வைட்டமின் சி உள்ள உணவுகள் மற்றும் பழுங்களைச் சாப்பிட வேண்டும். இதனால் இரும்புச்சத்து சுலபமாக இரத்ததிற்குள் போகும்.

தக்காளி, மற்றும் புளி சேர்ந்த உணவுகளை அலுமினியச் சட்டிகளில் சமைக்காதீர்கள். இதனால் சட்டியிலிருந்து அதிக அளவில் அலுமினியம் உணவுக்குள் போகும்.


எங்கிருந்து அலுமினியம் வருகிறது என்று தெரிந்தால் அதைத் தவிர்ப்பது எளிது.