இரும்பு நமக்கு மிகவும் தேவையான உலோகம். சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க இரும்பு அவசியம். சிவப்பு இரத்த அணுக்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் பிராணவாயுவை எடுத்துச் சென்று சக்தியை உருவாக்க மிகவும் முக்கியமானது.

அலுமினியம் உடம்பிற்கு தேவையில்லாத உலோகம். பல பத்தாண்டுகளாக அலுமினியம் சிறுகுடலில் இருந்து உறிஞ்சப்படாது என்று எண்ணப்பட்டது. இரத்தத்தில் குறைந்த அளவு அலுமினியத்தை அளக்க சரியான வழிமுறையில்லாததால் இவ்வாறு எண்ணப்பட்டது. இன்று AAS மற்றும் ICP-MS கருவிகளால் மிகக்குறைந்த அளவு அலுமினியத்தை இரத்தத்தில் மிக துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

இரும்புச்சத்திற்கும் அலுமினியத்திற்கும் எந்தவிதமான உறவும் இல்லாவிட்டால் எங்குதான் பிரச்சினை இருக்கிறது? ஆமாம், ஒரு பெரிய பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இரும்புச்சத்தும் அலுமினியமும் சிறுகுடலில் இருந்து இரத்தத்திற்குச் செல்லும் வழி ஒரே வழிதான். இரும்புச்சத்தை உறிஞ்ச வைட்டமின் சி தேவை. இதே வைட்டமின் சி அலுமினியம் உறிஞ்சப்படுவதற்கும் தேவைப்படுகிறது. எளிதான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், உணவில் அதிக அளவில் அலுமினியம் இருந்தால் வைட்டமின் சி யும், எடுத்துச் செல்லும் புரதமும் சிறு குடலில் இருந்து அலுமினியம் உறிஞ்சப்படுவதற்கு சாதகமாக இருக்கின்றன. இதன் விளைவு உடம்பில் இரும்புச்சத்து பற்றாக்குறை.

இரும்புச்சத்து பற்றாக்குறையால் உண்டாகும் பிரச்சினைகளைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் அலுமினியம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை நாம் தவிர்க்கவேண்டும். பல வழிகளில் இருந்து வரும் அலுமினியம் அசுத்தமும் ஒரு பெரிய பிரச்சினையாகும். இந்த இரண்டு பிரச்சினைகளையும் தவிர்த்தால் இரும்புச்சத்து நன்றாக உறிஞ்சப்பட்டு நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.