மஞ்சள் இஞ்சியினத்தைச் சேர்ந்தது. இது ஒரு மசாலாப் பொருள். ஆனால் இது ஒரு நல்ல மருந்துமாகும். இது வேகவைக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு, அரைக்கப்படும்பொது மஞ்சள் பொடியாகிறது. மஞ்சளில் உள்ள முக்கியமான பொருள் குர்குமின்.

மேல் நாட்டினர் தங்கள் உணவுகளில் மஞ்சளைப் பலவிதங்களில் பயன்படுத்துகின்றனர். இது உணவுக்கு வண்ணம் கொடுக்கும் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. மென்குடிபானங்கள், பேக்கரி பொருட்கள், பாலிலிருந்து செய்யப்படும் பொருட்கள், ஜஸ்கிரீம், ஆரஞ்சுப்பழ குடிபானம், பிஸ்கட், பாப்கார்ன், ஜெலாடின், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது.

நாம் தினமும் மஞ்சள் கலந்த மசாலாவைப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். நமது கறி பவுடர்தான் உலகில் மிகவும் தெரிந்த, முக்கியமான மசாலா கலவையாகும். தென் ஆசியாவில் இது அதிகமாக உபயோகிக்கப்படுகிறது.

ஆயுர்வேத முறைப்படி தீக்காயம், வெட்டுக்காயங்களில் மஞ்சள் கிருமிநாசினியாகப் பயன்படுகிறது. இக்காயங்கள் பரவாமல் தடுக்கும் நச்சுத்தடுப்பானாகவும் மஞ்சள் பயன்படுகிறது. இதிலிருக்கும் ஃப்ளோரைடு நமது பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வயிற்றில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதைக் குணப்படுத்தவும் மஞ்சள் உபயோகப்படுத்தப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக மஞ்சளில் உள்ள குர்குமினைப் பற்றி தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மனித உடலில் உபயோகப்படுத்தி கடைசிக் கட்டமான மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சிகள் கீழ்க்கண்ட வியாதிகளைக் குணப்படுத்த நடைபெறுகின்றன:

• வாதத்தினால் வரும் மூட்டு வீக்கங்கள்
• ஒவ்வாமை
• ஆல்ஸ்ஹைமர் வியாதி
• கணையம் புற்றுநோய்
• மலக்குடல் புற்றுநோய்
• நிணநீர் புற்றுநோய்

குர்குமின் சேர்த்த களிம்பு சோரியாஸிஸ் என்ற தோல் வியாதிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளின் மற்ற பயன்கள்:

• ஆபத்தான அல்ட்ரா வயலட் பி சூரியக்கதிர்கள் நமது தோலின்மேல் படாமல் இருக்க உபயோகிக்கப்படும் திரவத்தில் (Sun-Screen)
• இந்தியப் பெண்கள், தங்கள் முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு
• இந்தியாவில் உணவு, துணிகளுக்கு வண்ணப் பொருளாக
• டெட்ராஹைட்ரோகுர்குமினோய்ட்கள் ஆன்ட்டிஆக்ஸிடண்ட் ஆக
• எறும்புகள் மஞ்சளைக் கண்டு ஓடி விடும். ஆகையால் இரசாயனக் கொல்லிகளுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்துங்கள். இது சுற்றுபுற சூழலுக்கும் நமக்கும் நல்லது. எறும்புகளும் இயற்கைக்கு தங்கள் கடமைகளைப் பிரச்சினையில்லாமல் செய்ய முடியும்

மஞ்சள் ஒரு அருமையான, எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கைப் பொருள். இதைப் பற்றி இன்னும் அதிகம் ஆராய்ச்சிகள் தேவை.